தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா, பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பே ஐரோப்பியாவில் இருந்தது தெரியவந்துள்ளது.

omicron

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா, பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பே ஐரோப்பியாவில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியில் குறைந்தது 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிவேக பரவல், மீண்டும் கொரோனா பாதிப்பின் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 24 ஆம் தேதி வெளியானது. ஆனால், நெதர்லாந்தின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய நிறுவனம் நவம்பர் 19 , நவம்பர் 23-ம் தேதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளிலே ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மற்ற மாறுபாடுகளைக் காட்டிலும் ஒமிக்ரான் தீவிரமானது என கண்டறிந்தாலும், ஆரம்பக்கால சோதனை முடிவுகள் மிதமான பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், பல சோதனைகள், தரவுகள் ஆய்வுக்கு பிறகே, அதன் வீரியம் தெரியவரும் என தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா வரும் பயணிகள் அனைவரும் புறப்படுவதற்கு 24 நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுவருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரானால் ஏற்படும் ஆபத்து அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தடுப்பூசி போடாத 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களும், உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களும் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதனைதொடர்ந்து கிரீஸ் நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என்றும், ஜனவரி 16 ஆம் தேதிக்குள் முதல் டோஸ் எடுக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில், கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கும் சமயத்தில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்து சென்ற 2 விமானங்களில் பயணித்த 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், 14 ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருந்தது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், ஒமிக்ரான் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசியால் தடுக்க முடியுமா, அதன் சிகிச்சை முறைகள் என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இருப்பினும், தரவுகளை ஆராயும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல நாடுகளில் ஒமிக்ரான் தென்பட்டாலும், அமெரிக்கா, இந்தியாவில் இதுவரை ஒரு வழக்கும் பதிவாகவில்லை. அதன் பரவல் வேகத்தைக் குறைப்பதே நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒமிக்ரான் மாறுபாடு தான், இதுவரை எந்த மாறுப்பாட்டிலும் காணாத மிகப் பெரிய எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருந்துள்ளது. அதிலிருந்த குறைந்தது 50 பிறழ்வுகளில் 30 க்கும் மேற்பட்ட 'ஸ்பைக்' புரதம் இது ஹோஸ்ட் செல்களை இணைக்கப் பயன்படுத்துகிறது, தடுப்பூசிகளின் முதன்மை இலக்கு ஸ்பைக் ஆகும். தடுப்பூசி தயாரிப்பாளர்கள் ஒமிக்ரானை எதிர்த்துப் போராட தங்களது தடுப்பூசிகளில் தேவையான மாற்றத்தை செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான ஆப்பிரிக்கர்கள் ஒரு டோஸ் கூட பெறாத நிலையில், பல பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் மூன்று டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.அனைவரும் தடுப்பூசி போடாத வரை, தொற்று நோயின் வகைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய மாறுபாடு முதன்முதலில் நவம்பர் 11 அன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அண்டை நாடான தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான், அதில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நவம்பர் 9 ஆம் தேதியே ஒமிக்ரான் பாதிப்பு மாதிரி கிடைத்தாலும், பழைய மாதிரிகளை சோதனை செய்கையில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு வாரமும் 2 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.இது உலகின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேலானது ஆகும். தடுப்பூசிகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் மூலம், இறப்புகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட குறைந்துள்ளன. ஆனால், தற்போது ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் கடந்த வாரம் அதிகளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.