தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றானது தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அன்று முதல் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவானது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் அளவையொட்டியே தமிழகத்தில் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஊரடங்கு உத்தரவு இது வரையிலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் அளவு 36 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது 720 என்ற அளவில் முற்றிலுமாக குறைந்து உள்ளது. 

இப்படியாக, கொரோனா தொற்று வைரஸ் பாதிப்புகள் குறையும் அளவுக்கு இங்கு கட்டுப்பாடுகளிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளன. 

அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, 30 ஆம் தேதியான நேற்றுடன் முடிவடைந்து விட்டது.

இதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணைப்படி 30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கடிதத்தில், “கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது” என்றும், கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் வேண்டும்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

முக்கியமாக, “பொது மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், பொது மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.