ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கு பரவிவிட்டதாக தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

50 வகை மரபணுப் பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.  

வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை. 

omicron south africa

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாடு மீது பிற உலக நாடுகள் பயணகட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு தென் ஆப்பிரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், "தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்று மற்றும் நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். 

எங்கள் நாடு மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடுகள் அறிவியலை பின்பற்றி அவர்களது முடிவுகளை மறு ஆய்வு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது" இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் வருவதற்கும் தென்னாப்பிரிக்காவுக்கு விமானங்கள் செல்வதற்கும் பல உலக நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு, அறிவியலுக்கு விரோதமான  இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக ரத்து செய்யப்பட  வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா அறிக்கை விடுத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான விமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளில் முன்னணியில் இருப்பவை பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவை ஆகும்.

இதுகுறித்து சிறில் ரமபோசா ஞாயிற்றுக்கிழமையன்று பேசும்பொழுது "பயண கட்டுப்பாடுகளை கடுமையாகக் குறை கூறினால், இந்த கட்டுப்பாடுகளுக்கு எந்த அறிவியல் பூர்வமான அடிப்படையும் கிடையாது. இந்த பாரபட்சமான நடவடிக்கையினால் தென்னாப்பிரிக்கா பலிகடா ஆக்கப்பட்டு உள்ளது. 

omicron South africa
உண்மையிலேயே பயணக் கட்டுப்பாடுகள் இல்லை. வைரஸ் பரவுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் மிகக்கடுமையாக மீண்டும் பாதிக்கப்படுவதற்கு முன்னர் விமான கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும். பழைய இயல்பான விமான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.

எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான அழைப்பாகத்தான் ஒமிக்ரான் தோன்றியுள்ளது என்று உலக நாடுகள் கருதவேண்டும். தென்னாப்பிரிக்காவை பொறுத்தமட்டில் தடுப்பூசி பஞ்சம் என்பதே இல்லை. எதிர்த்துப் போராடுவதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்" என்று சிறில் ரமபோசா கூறியுள்ளார்.

இதேபோல் தென்ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவசர அவசரமாக பயணக் கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதித்திருப்பது தேவையில்லாத நடவடிக்கை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் மட்ஷிடிசோ மோயெட்டி பல உலக நாடுகளில் ஒமிக்ரான் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது, உலக கூட்டு முயற்சிக்கு எதிரான நடவடிக்கையாகும் என்று மட்ஷிடிசோ மோயெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.