இந்திய திரையுலகின் ஆகச் சிறந்த  திரை கலைஞராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க பயணம் மேற்கொண்டு திரும்பிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு லேசான இருமல் தொந்தரவு தென்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட கமல்ஹாசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில், திரு.கமல்ஹாசன் கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  அனுமதிக்கப்பட்டார். லேசான கோவிட் 19 பாதிப்புக்குள்ளான கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துவிட்டார். இருப்பினும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதியிலிருந்து தனது வழக்கமான  பணிகளை தொடரலாம் என தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த உலக நாயகன் கமலஹாசனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.