சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தோனியின் சம்பளம்  குறைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு, மிகப் பெரிய மெகா ஏலம் ஒன்று விரைவில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள 2022 ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

இதற்காக, “தற்போது உள்ள 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள முடியும்” என்று, இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த 4 வீரர்களில், அதிகபட்சமாக 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம் என்றும், வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 2 பேரை  தாண்டக் கூடாது” என்றும்,  இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருந்தது.

அத்துடன், “ஐபிஎல் வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே 16 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய், 8 கோடி ரூபாய், 6 கோடி ரூபாய் வீதம் என்று, மொத்தம் 42 கோடி ரூபாயை அணி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டன.

அதன் படியே, சென்னை அணி தக்கவைத்து உள்ள வீரர்களின் பட்டியல் முன்னதாக  வெளியிடப்பட்டது. 

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை சென்னை அணி தக்கவைத்துக்கொண்டு உள்ளது. 

குறிப்பாக, இந்த முறை ரவிந்திர ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயும், கேப்டன் தோனிக்கு 12 கோடி ரூபாயும், மொயின் அலிக்கு 8 கோடி ரூபாயும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 6 கோடி ரூபாயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் செலவிட்டு உள்ளதாக, அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அகமதாபாத் அணியானது சென்னை அணி வீரர் ஜடேஜாவுக்கு 20 கோடி ரூபாய் வரை தர தயாராக இருந்தது. என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை தக்க வைத்துக் கொண்டால், அவருக்கு 16 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், அந்த 16 கோடி ரூபாயுடன் சென்னை அணிக்காக விளையாட ஜடேஜா, தற்போது பச்சைக் கொடி காட்டி உள்ளார்.

அதே போல், முகமது சிராஜுக்கு 10 கோடி ரூபாய் வரை தர லக்னோ அணி தயாராக இருந்தது. ஆனால், அவர் 7 கோடி ரூபாயுடன் பெங்களூர் அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, “தோனி சம்பளம் குறைக்கப்பட்டதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது?” என்று, பல்வேறு தரப்பினரும் பல கேள்விகளை இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான நடைபெற்ற சென்னை அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தோனி, “16 கோடி ரூபாய் செலவு செய்து என்னை தக்கவைக்காதீர்கள் என்றும், அணியின் நலனை கருத்தில் கொண்டு என்னை ஏலத்தில் விடுமாறு கேட்டுக்கொண்டதாகவும்” தெரிகிறது. 

ஆனால், இதற்கு உடன்படாத சென்னை அணி நிர்வாகம், சம்பளத்தை குறைத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் தோனியின் நல்ல மனதை சென்னை ரசிகர்கள் தற்போது வெகுவாக பாராட்டி வருகின்றனர்.