கொரோனா வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வூகான் நகரில் துவங்கி கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளை பொதுமுடக்கத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இங்கிலாந்தில் ஆல்பா எனும் வேற்றுருவமும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா வேற்றுருவங்களும் கொரோனா வைரஸில் அறியப்பட்டன.

கொரோனா வைரஸை விட இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களால், அதிகளவிலான தொற்றும் பெரும் உயிரிழப்பும் ஏற்பட்டன. குறிப்பாக இந்தியாவில், முதல் ஊரடங்கின் போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்புகள் பெரியளவில் இல்லாமல் இருந்தன.

omicron virus

ஆனால் ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு ஆனது. 

தற்போது இந்த 2-வது அலை இந்தியாவில் சற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது. 

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ஒமிக்ரான், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவியுள்ளது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் விழுந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதியாகும் முன்னரே, அவை பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதை இது காட்டுகிறது.

எல்லைகள் மூடல், விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு, விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடும் மருத்துவப் பரிசோதனை, முழுவீச்சில் தடுப்பூசி இயக்கம், இயல்புக்கு திரும்பிய பொதுவெளிக் கட்டுப்பாடுகள் மீது மறுபரிசீலனை. என நாடுகள் தங்கள் தேவைக்கேற்ப ஒமிக்ரான் தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

omicron virus

அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய ரகங்களை விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல தகவல்கள், ஒமிக்ரான் மீதான கவலையை அதிகரித்துள்ளன.

இதற்கிடையே இதுவரையிலான மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், உலக சுகாதார நிறுவனம் ஒமிக்ரான் குறித்த புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானது ஏற்கெனவே கொரோனா பாதித்து மீண்டவர்கள் ஒமிக்ரான் தாக்குதலுக்கு எளிதில் இலக்காக வாய்ப்புள்ளது என்பதுதான். 

இன்னும் முழுமை அடையாத தற்போதைய மருத்துவ ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒருமுறை கொரோனா பாதித்து மீண்டவர்களின் உடலில், அந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி இயல்பாக அதிகரிக்கும் என்பதால், அவர்கள் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவித்தன. 

ஆனால் நடைமுறையில் கணிசமானோர் 2-ம் முறை கொரோனாவுக்கு ஆளானதைப் பார்த்தோம். இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், எளிதில் ஒமிக்ரான் பரவலுக்கு ஆளாவார்கள் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் கொரோனாவில் விழுந்து எழுந்தோருக்கு மட்டுமன்றி அனைவருக்குமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.