வாடகை தாய் உதவியுடன் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன், போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டல் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான வின்சென்ட் பாஸ்கர் என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜிலாராணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. 

இந்த திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் பணம் ஆகியவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது, திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர், பெண் அணிந்திருந்த தங்க நகைகளை விற்று உள்ளார். 
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, இது தொடர்பாக கணவனிடம் கேட்டபோது, தனது மனைவியிடம் சண்டை போட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதனையடுத்து, அவர் மனைவி விஜிலாராணி கணவனின் இந்த செயல்பாடுகள் குறித்து தனது தந்தையிடம் முறையிட்டு இருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தந்தை கணேசன், இது குறித்து உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செ்யத போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும், தொடர்ந்து விஜிலா என்ற பெண்ணை 6 ஆவதாக திருமணம் செய்திருப்பதும்” கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மற்றவர்களுக்கு பயந்து கோவில்பட்டியில் உள்ள தனது 4 வது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதையும் போலீசார்  கண்டுப்பிடித்தனர்.

இதனையடுத்து, திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்குள்ள சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு தாயாகவும், தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில் பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதையும், அவர் தனது வாக்குமூத்தில் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, வின்சென்ட்பாஸ்கர், பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

முக்கியமாக, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருமண தரகர் இன்பராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனிடையே, 6 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞர், போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.