ஜனங்களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனை அடுத்து இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் மற்றும் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

டான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வரும் அயலான் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி வரும் சிவகார்த்திகேயன் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் நாய் சேகர் படத்தில் சதீஷ் மற்றும் குக் வித் கோமாலி பவித்ரா இணைந்து நடிக்கின்றனர்.

நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , இசையமைப்பாளர் அனிருத் இசையில் துள்ளலான ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.