ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து இயல்பு நிலைக்கு மக்களை திரும்பவிடாமல் பாதித்து வருகின்றது. இந்நிலையில் புதிதாக உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. 

இதற்கு காரணம் இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ் அதிபயங்கரமானது என்பதுதான். அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒமிக்ரான் என்று இந்த வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டு, அதன் நிபுணர் குழு இந்த ஒமிக்ரான் கொரோனா வைரசை இரவு பகலாக ஆராய்ந்து வருகிறது. 

RTPCR OMICRON

இந்த ஒரு வார காலத்திற்குள் ஒமிக்ரான் வைரஸ் 14 நாடுகளில் கால் தடம் பதித்து உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் 3-வது அலை ஏற்படக்கூடும் என தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடந்த 28-ந் தேதி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  அதில் “வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதிக்க வேண்டும். 

கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு உடனடியாக மாதிரிகளை அனுப்பி வைத்து முடிவை அறிய வேண்டும். ஒருவேளை ஒமிக்ரான் பாதிப்பு என முடிவு வந்தால் அவசரமாக சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தில் உள்ள நாடுகள் என அறியப்பட்டுள்ள இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய அரசு அறிவித்தது. 

மேலும் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் மாநிலங்களை வலியுறுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக விமானநிலையங்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் “12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.  12 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. 

இந்த 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

OMICRON CORONA VIRUS RTPCR

பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து 7-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து, மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை நீட்டிக்க வேண்டும்” என சுகாதாரத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.