தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு யாரும் வரவில்லை என்றும், அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

omicron

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் உடன் இருந்தார்.

செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் சுகாதார அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிகளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா வைரஸ் உறுமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலக நாடு முழுவதும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை டெல்டா வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு யாரும் வரவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், போதுமான அளவு பாதுகாப்பும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து உள்பட 12 நாடுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நாடுகளில் இருந்தும் அங்கிருந்து இதர நாடுகள் வழியாக வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான செலவை பயணிகளிடம் வசூலித்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் விமான நிலையத்திலேயேதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதிக்கப்படும் நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்த வேண்டும். 8-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அடுத்த 7 நாட்களுக்கு பயணிகள் தாங்களாகவே உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட பயணியை வழக்கமான கொரோனா தொற்று நோயாளிகளுடன் இல்லாமல் தனி அறையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ‘ஒமிக்ரான்’ பாதிப்பு கண்டறியப்படாத மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். மேலும் அறிகுறி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விமானத்தில் பயணித்து வரும் 5 சதவீத பயணிகளை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். அதற்கான செலவை அந்தந்த விமான சேவை நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளது.