மலையாள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஜெய சூர்யா. துணை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி பிறகு ரசிகர்கள் விரும்பும் ஹீரோவானார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். தமிழில், வினயன் இயக்கிய என் மன வானில் என்ற படத்தில் நடித்தார். உலக நாயகன் கமல் ஹாசனுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கேன்சர் நோயாளியாக தோன்றியிருப்பார். 

தற்போது வெள்ளம் என்ற மலையாள படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக, சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரஜேசன் இயக்குகிறார். சித்திக், பைஜு, இடைவேளை பாபு, ஶ்ரீலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் குடிகாரனாக நடிக்கிறார் ஜெயசூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமின்றி தப்பியுள்ளார் ஜெயசூர்யா. 

அதாவது கதைப்படி பவர் டிரில்லர் வாகனத்தை இயக்கியபடி அவர் நடந்து வர வேண்டும். இதற்காக அவரிடம் ஒரு டிரில்லர் வாகனம் கொடுக்கப்பட்டது. படக்குழு அதைத் தூரத்தில் இருந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி அவரை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றது.

இதைக் கண்ட படக்குழுவினர் ஓடிச்சென்று ஜெயசூர்யாவை பிடித்து இழுத்தனர். வாகனம் விழ இருந்த இடம் பெரிய பள்ளம் என்பதால், படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஆண்டில் துவக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கூட விபத்து ஒன்று ஏற்பட்டது. நூல் இழையில் நடிகர்கள் கமல் ஹாசன், ஷங்கர் மற்றும் காஜல் அகர்வால் போன்றோர் உயிர் தப்பினர். கொரோனா காரணமாக முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இது போன்ற விஷயங்களால் அதிர்ச்சியில் உள்ளனர் திரை ரசிகர்கள்.