மக்கள் விரும்பும் நாயகனாகவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸை அமேசான் ப்ரைம் தயாரிக்கிறது. இந்த தொடரில் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாஹித் கபூருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு 2021-ல் துவங்கவுள்ளதாம். பான் இந்தியா தொடராக உருவாக்குவதற்கு தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தேவை என்பதால் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஷாஹித், விஜய் சேதுபதி இருவருமே இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிப்பதாகவும், இந்த கேரக்டர்கள் புதிதாக இருக்கும் என்றும் இந்த வெப்சீரிஸ் குழு கூறியுள்ளது.

தி பேமிலி மேன் என்ற வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இந்த வெப்சீரிஸை இயக்க உள்ளனர். இவர்கள் இப்போது தி பேமிலி மேன் தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கி உள்ளனர். அதில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படப்பிடிப்பு கடந்த மாதம் நடந்து முடிந்தது. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். 

இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.