முதலமைச்சர் நாற்காலிக்காக அதிமுகவும் - பாஜகவும் வெளிப்படையாக மோதிக்கொள்ளும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் களம் தற்போது சூடுப் பிடிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதிகமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூதாகாரமாக வெடித்து, அந்த கட்சிக்குள் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து தற்போது ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, “அதிமுக வை ஓரங்கட்டி திமுக வை எதிர்க்கட்சியாக்குவதே பாஜக வின் திட்டம்” என்று, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன், கடந்த மாதம் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி இருந்தார். காரணம், அது தொடர்பான சம்பங்களே தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

அது உண்மை தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் சுவர் விளம்பரத்தால் அதிமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், இரு கட்சிகளின் தலைமை வரை சென்றது. 

மேலும், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் , பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெறக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், யாருக்கு எத்தனை சீட் ஒதுக்குவது என பயங்கர ப்ரெஷரில் அதிமுக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு முக்கியக் காரணம் பாஜக கூடுதலாக 10 சீட்டு வரையும், பாமக 30 சீட்டு வரையில் கூடுதலாகக் கேட்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து, அதிமுக கூட்டணி அரசின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான், என்பதை அறிவித்து, அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்” என்று, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் வசாயிகள் வணிகர்களாகவும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். 

“புதிய தொழில் நுட்பங்களால் இரட்டிப்பு மகசூல், உள்ளிட்ட பல நன்மைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, திமுக போராட்டங்களை நடத்துவதாகவும்” அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய கூட்டணியே தொடரும் என்றும், ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை, பாஜகவின் தேசிய தலைமையே முடிவு செய்யும்” என்றும், எல்.முருகன் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய உள்ள அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்காவிடில் பாஜக தனித்துத்தான் போட்டியிட வேண்டும்” சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “கூட்டணி தொடரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்று, குறிப்பிட்டார்.

“அதே நேரத்தில், பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல” என்றும், கூறினார்.

“அதிமுக முதல்வர் வேட்பாளரை முன்னரே அறிவித்து விட்டது. கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவே பெரும்பான்மையுடன் 7 முறை வெற்றிபெற்றது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது தொடர்பாக பேசிய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, “பாஜக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் வேட்பாளரை அவர்கள் ஏற்க ணே்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார். 

“அப்படியில்லை என்றால், அவர்களுடன் கூட்டணியில் தொடர முடியாது என்றும், பாஜக தனித்துத் தான் போட்டியிட வேண்டும்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “முருகன் கூறியது அவரது கருத்து என்றும், அவருக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது என்றும், அவர் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்” என்றும், அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, பேசிய பாஜக பொதுச் செயலாளர் வனதி சீனிவாசன், “இது தொடர்பான நிலைப்பாட்டை பாஜக தலைமையே முடிவு செய்யும் என்றும், அந்த வகையில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது சரிதான் என்றும், அவர் தெரிவித்ததுள்ளார். 

இதனிடையே, முதலமைச்சர் நாற்காலிக்காக அதிமுக - பாஜக கட்சியினர் வெளிப்படையாக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.