மேற்கத்திய சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் கோல்டன் க்ளோப் முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்கரைப் போல அல்லாமல், கோல்டன் க்ளோப் விருது விழா ஒரு ஹோட்டலில், இரவு நேர விருந்து போலத்தான் ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் வழக்கமாக விருது வழங்கும் விழாக்களுக்குத் தொடக்கப் புள்ளியாக கோல்டன் க்ளோப் பார்க்கப்படுகிறது.

இந்த உயரிய விருது விழாவில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதை 2D என்டர்டெயின்மென்ட்டின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். வரும் ஜனவரி 2021-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற விருக்கும் 78-வது கோல்டன் க்ளோப் விருது விழாவில், சூர்யா நடித்துள்ள நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரம் நிச்சயம் உலகளவில் உள்ள திரை விரும்பிகளை ஈர்க்கும் என்றே கூறலாம். 

சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். 

படத்தின் பாடல் வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில் 2020 ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கூகுள் தேடலிலும் இந்த படம் இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சூர்யா 40 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.