ஜனவரியில் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கும் ரஜினிகாந்த் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று  ஆட்சி அமைக்க வேண்டி, ஆண்டாள் கோவில் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.


அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் , ‘’ நிச்சயம் 31ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சியையும்  கட்சியின் சின்னத்தையும் அறிவிப்பார். அனைத்து தரப்பையும் ஆதரிப்பது ஆன்மீக அரசியல், லஞ்ச ஊழலை அழிப்பது ஆன்மீக அரசியல். கமலஹாசன் காந்திக்கு B டீம் அல்ல காரல்மார்க்ஸ் B டீம்.  ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல் வருவதாக இருந்தால் , நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஆன்மீக அரசியல் தான் தலைமை ஏற்க வேண்டும். 


பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு நன்றி. அவரின் கருத்து சரியானதே. பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும். அரசியலுக்கு வந்த பின்பு சில விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும். திமுக, அதிமுகவிற்கு பலம் இல்லை. பலம் இல்லாத கட்சிகள். அனைத்துக் கட்சி தொண்டர்களும் ரஜினியின் ஆன்மிக கட்சிக்கு விரைவில் வந்துவிடுவார்கள். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் ரஜனி ஆட்சி.


திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்காக தான் மானியம் கொடுக்கிறது. ஆனால் மோடி அப்படி இல்லை. ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக பல்வேறு மானியங்களை கொடுத்து வருகிறார்” என்று தெரிவித்தார்