“இன்றைய சமையல் முறை, உடல் புண்ணுக்கு மருந்து பூசாமல் காய்ச்சிய கம்பியால் சூடு வைப்பதற்கு சமம்!” என்று, இயற்கை ஆர்வலர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக 30 வயதை கடந்தவர்களுக்கு அல்சர் பாதிப்பு சர்வ சாதாரணமாகத் தென்படுகிறது. பசிக்கும் நேரத்தில் உணவைத் தவிர்ப்பதே அல்சர் என்ற குடல் புண் உண்டாக்கும் என்று கருதுகிறோம். ஆனால், ஒரு நாளைக்கு 3 வேளையும் தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு கூட அல்சர் பாதிப்பு வரும் என்று மருத்துவர் கூறியதும் சற்று அதிர்ந்து தான் போகிறோம். 

அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஏற்படும் கீரல்களால் விழும் துகள்கள் எங்கே போகிறது? நம் உணவில் தான் கலக்கிறது. இதனால் கூட அல்சர் ஏற்படும். என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும், ஒரு அலுமினிய பாத்திரத்தை வாங்கிவிட்டால் குறைந்தது 10 வருடமா, வரும் என்று நம்புகிறோம். சாலையில் செல்பவர்களை அழைக்கப் பாத்திரத்தைத் தட்டி சத்தம் எழுப்புவதும் உங்களுக்கான சாவு மணிதான் அது என்றும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
 
இந்தியாவில் 40 வயதை கடந்தவர்கள் தினந்தோறும் சராசரியாக 8 மாத்திரைகளை உட்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியர்களில் 60 சதவீத மக்கள் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவால் வறுமை கோட்டுக்கு கீழே வந்து விடுகின்றர். எண்ணிலடங்கா பாதிப்பை ஏற்படுத்தும் உலோக பாத்திரங்களில் இருந்து தப்பிப்பது எப்படி? இதற்கு மாற்று தான் என்ன? என்று தேடியபோது கடந்த தலைமுறை வரை பயன்பாட்டில் இருந்து மண் பாத்திரங்கள் தான் தீர்வு என்று தெரிய வந்தது. ஆனால், மண் பாத்திரங்களில் பயன்படுத்துவதில் மக்களுக்குள்ள தடைகள் என்ன? என்பது குறித்து மண்பாண்ட தொழில் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஈசன் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் ம.லோகேஷிடம் பேசியபோது...

“மனத் தடை தான் முக்கிய காரணம்” என்று, அடித்துக் கூறுகிறார். 

“மண் பாத்திரங்களை பொருமையாக கையாளவில்லை என்றால், உடைந்துவிடும். உணவு வீணாகிவிடும். பாத்திரம் உடைந்துவிட்டால், உடனடியாக மண்பாத்திரம் வாங்க கடைகள் இல்லை. உலோக பாத்திர பயன்பாட்டில் இருந்து மண்பாத்திர சமையலுக்கு மாற விரும்புபவர்களுக்கும் கூட உடனடியாக மண்பாத்திரங்களை வாங்க முடியாதது கூட ஒரு தடையாக உள்ளது. இந்த நிலையில் உடனடியாக மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் உள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மண்பாண்டத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது, அந்த குறிப்பிட்ட சாதியினரே வேறு தொழில்களுக்கு மாறிவிட்டதால், 20 வருடங்களுக்கு பிறகு மண்பாண்டத் தொழில் முற்றிலுமாக அழிந்துவிடும். அதனால், மண்பாண்ட தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் உள்ளோம். இதன் மூலம் மண்பாண்ட தொழிலை கற்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம். தொடர்ந்து மண்பாண்ட தொழில் செய்ய மண் எடுப்பது முதல் விற்பனை செய்வது வரையில் துணையாக இருப்போம். 

சாதியக் கட்டமைப்புக்குள் மண்பாண்டத் தொழில் சிக்கி விட்டதால், இன்று அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்த கட்டமைப்பை உடைத்து அனைத்து சாதியினரும் மண்பாண்ட தொழிலை கற்று வணிகம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மரபுத் தொழில்களும் நிறுவன மையமாக்கப்பட்டால் லாபம் கொழிக்கும் பெருந்தொழிலாக மாறும் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 
மண்பாண்ட தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பணிகள் என்பது மேலோட்டமாக பார்க்க எளிமையானதாக இருக்கும். ஆனால், சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் புரட்சிகரமான செயல்பாடாகும் சாதிய கட்டமைப்புக்குள்ள சிக்கியுள்ள மண்பாண்ட தொழிலை அனைத்துத் தரப்பினரும் பயிற்சி அளித்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், குழுவாக செயல்படுதல், மண்பாண்டத்துக்கான சந்தையை உருவாக்குதல், விற்பனை புதிய மையங்களை உருவாக்குதல், புதியோர்களை இணைப்பது, நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட அனைத்து அடங்கும்.

இன்னும் 20 வருடங்கள் மண்பாண்ட தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் முழு வீச்சில் செயல்பட்டால் தற்போதைய தலைமுறையை விட பலமடங்கு ஆரோக்கியமான வீரியமுள்ள சந்ததியினரை உருவாக்க முடியும். 

மண்பாண்டங்கள் ஏதோ மாயாஜாலங்களை நிகழ்த்திவிடுமா என்ன? கேட்டால், ஆம் என்பது தான் என் பதில். இன்று 40 வயதை தொடாதவர்களுக்குக் கூட மூட்டு வலிகள் உள்ளது கால்ஷியம் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். அதுவே, பானையின் உள்புறத்தில் சுன்னாம்பு பூசிய மண்பானையில் 3 மாதங்கள் தண்ணீர் குடித்தால் போதும் உங்கள் உடலுக்கு தேவையான கால்ஷியம் கிடைத்துவிடும். அலுமினிய பாத்திரத்தில் புளிப்பு வகைகளை சமைத்தால் வேதியல் மாற்றம் நடக்கும் உணவு நஞ்சாகவும் வாய்ப்புள்ளது. ஆகவே, மண்பாத்திரத்தில் வேதியல் மாற்றம் நடக்காது.

இந்த உடலுக்கு தேவையான தண்ணீர், காற்று, உணவு என எல்லாவுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மண் மூலமாக தான் கிடைக்கிறது. சமைக்கும் போது மட்டும் மண்ணை தவிர்ப்பது ஆபாத்தான செயல்முறையாகும். நமது அன்றாட சமையல் முறையில் கூட நிறைய அலட்சியமும், அபத்தங்களும் உள்ளன. 

குறிப்பாக, தோசையை சுட்டு சாப்பிடுகிறோம். அரிசியை வேகவைத்து உண்ணுகிறோம். குழும்பை தாளித்து சாப்பிடுகிறோம். புட்டை கொளுக்கட்டையை அவித்து சாப்பிடுகிறோம். ஆனால், நம்மிடையே தினந்தோறும் பொசுக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. கடினமான உணவுகளையும் விரைவாக வேகவைக்கும் என்று, நம்பப்படும் பிரஷர் குக்கர்கள் உங்கள் உணவை வேகவைத்து தருவதில்லை பொசுக்கி தான் தருகிறது.
 
இந்த சமையல் முறை எத்தகைய ஆபத்தானது என்றால், உங்கள் உடலில் உள்ள கட்டிக்கு மருந்து பூசாமல், பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைப்பது போன்றது. கட்டி காணாமல் போய்விடும். ஆனால், அந்த இடத்தில் ஏற்படும் ரணம் மற்றும் வலி மோசமானது. அது, போன்றது தான் பிரஷர் குக்கரின் சமையல். நமது உணவு குறித்த முழுமையான விழிப்புணர்வே நம்மை ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்” என்று, இயற்கை ஆர்வலர் ம.லோகேஷ் ஆவேசமாக பேசி நம்மையே யோசிக்க வைத்துவிட்டார். 

சரிதான், நமது அன்றாட உணவு முறையில் நமக்கே போதிய அக்கறை இல்லை என்பதை அவர் உணர்த்த முற்படுகிறார் என்ற புரிதல் மட்டும் வருகிறது. இந்த புரிதல், எல்லோருக்குள்ளும் விழிப்புணர்வாகவே மாற வேண்டும் என்பதே இந்த இயற்கை ஆர்வலரின் தாழ்மையான கோரிக்கையாக உள்ளது.