“பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு, “இது தேர்தல் பொங்கலாக இருக்கும்” என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான பணிகள் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து அவருடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். 

அப்போது, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட இருப்பாளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, 47.20 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 8 பணிகளையும் திறந்து வைத்தும், 6.56 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இது வரை பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒதுக்கப்பட்டு உள்ளதால், 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்று, அதிரடியாக அறிவித்தார். 

இந்த தொகையானது, ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இவற்றுடன் பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என்றும், துண்டுக்கரும்புக்குப் பதில் முழுக்கரும்பு வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக கருத்து கூறிய எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கி விட்டதாக சொல்லி வருவது, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போல இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் மினி மருத்துவமனை திட்டம்” என்று, விமர்சனம் செய்தார். 

குறிப்பாக, “தேர்தல் வருவதால் சுயநலத்திற்காகப் பொங்கல் பரிசு 2,500 ரூபாய் தருகிறாரா?” என்று, முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினர்.

அதே போல், “தமிழக மக்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க உள்ளதற்கு, இது தேர்தல் பொங்கலாக இருக்கும்” என்று, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும், பொங்கல் பரிசு அறிவிப்பை சுயநலம் என்று கூறுவதா?” என்றும், மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பொது மக்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக இணையத்தில் கருத்து யுத்தம் ஒன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.