விமானம் மூலம் தமிழகம் வந்த கொரோனா தொற்று பாதித்தவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எ.ஐ.ஈ.டி (SIET) கல்லூரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை ஆய்வு செய்த பிறகு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் தேவையில்லை. ஆனால்  இந்த தொற்றை தடுக்க இரு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்.  தனி நபர் இடைவைளி, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.  

கொரோனா இதுவைரை பல உருமாற்றங்களை கண்டுள்ளது. வரும் நாட்களிலும் மாறுதல் பெறும். மக்கள் அச்சமடைய வேண்டாம். பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்தியா முழுவதும் உள்ள முன்கள,  சுகாதார பணியாளர்கள் கேட்டு வருகின்றனர். 

OMICRON TAMIL NADU

மத்திய அரசு மற்றும்  மருத்துவ வல்லுநர்கள்  இது குறித்து முடிவு செய்வர். நீலகிரியில்  பழங்குடியினர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால்  நகர்ப்புறங்களில் பலர் இப்போதும் தயங்குகின்றனர்.

ராணிபேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் 70 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும்  தருமபுரி, வேலூர்,  மதுரையிலும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

கொரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன. பாதிப்பற்ற நாடுகளிலிருந்து 85  விமானங்கள் வந்துள்ளன. மொத்தமாக 12, 188 பேருக்கு சோதனை செய்துள்ளதில், 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மூவரும் நலமாக உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.  இது முதல் கட்ட ஆறுதலை தந்துள்ளது. 

18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டதை உறுதி செய்ய , அவரது மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை முடிவு கிடைக்க 5 முதல் 7 நாட்கள் ஆகும்.

 பச்சிளங்குழந்தைகளுக்கே 12 வகையான தடுப்பூசி நடைமுறையில் இருக்கிறது. சில விசயங்களில் விஞ்ஞானிகளை நம்ப வேண்டும். கொரோனாவுக்கு இந்திய மருத்துவத்தின் கபசுரம் உள்ளிட்டவற்றையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். 

ஆர்.என்.ஏ. உருமாறுதல் என்பது  இயல்பானதுதான். அனைத்து வகை உருமாறுதலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தடுப்பூசிக்காக கூவிக் கூவி அழைக்க வேண்டியிருப்பது வேதனையைத் தருகிறது. டெங்குவில் ஒரு உயிரிழப்பு என்றாலும் பெரிய செய்தியாக இருக்கிறது. 

OMICRON TAMIL NADU

டெல்டா வகையில் பல உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து விடுகிறோம். ஓமிக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம். மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். 

மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. ஊரடங்கால்  2 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் போதும். சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை. என்றாலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம்" இவ்வாறு அவர் கூறினார்.