லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா கொரோனாவால் உலகம் முழுவதும் கடும் சிரமத்திற்கு ஆளாகி சற்றே மீண்ட நிலையில் அதை விட வீரியமான ஓமிக்ரான் என்ற கொரோனா தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் இது வேகமாக பரவக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்று கூறப்படுகிறது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

covid 19 chennai

இதையடுத்து உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரசை 3 மணி நேரத்தில் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளை, சென்னை கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தக்பாத் (TAQPATH) எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

எனினும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் நேற்று இருவருக்கு முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் 30-வது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் 136 பயணிகள் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது தஞ்சையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னரே என்ன வகை பாதிப்பு என்று தெரியவரும்.

covid 19 chennai

இதற்கிடையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து 8 பேரும் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் உட்பட யாருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒமிக்ரான் உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்த போது தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முடித்து திரும்பிய நிலையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.