ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி, ஒமிக்ரான் வைரஸ், மழைக்காலத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் ஆகியவை பற்றிய சந்தேகங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் அளித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

கேள்வி : ஒமிக்ரான் வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்புப் பணிகள் எப்படி போய்கொண்டு இருக்கிறது?

பதில் : “பொதுவாக இதுமாதிரி எந்த அச்சுறுத்தல் வரும்போதும் பதற்றம் அடையாமல் நாம் இருக்க வேண்டும்.  அதேநேரத்தில் ஆக்கபூர்வமாகவும், அதிகாரபூர்வமான, சரியான மருத்துவ வல்லுநர்களின் செய்திகளை மட்டும் தான் நாம் நம்பவேண்டும்.

ஒமிக்ரான் கொரோனா திடீர் என வந்து இருக்கிறது. சார்ஸ் என்ற வைரஸ் 2003 வந்தது. அதன்பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் சுவாச நோய் என்ற ஒன்று 2013-ல் வந்தது. தற்போது வூகானில் கொரோனா வந்துள்ளது. இந்த கொரோனா பலமுறை உருமாறி இருக்கிறது. 

பொதுவாக வைரஸ் என்ற நுண்கிருமி உயிர்வாழ்வதற்காக இந்த மாதிரி உருமாறி கொண்டே இருக்கும்.  கொரோனா வைரஸ் இதற்கு முன்னாடியும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு முடியாதநிலையில் டெல்டா வைரஸ், டெல்டா ப்ளஸ் என்று உருமாறியது. இந்த உருமாறிய கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் தான் இருந்தது.

OMICRON

இந்திய அளவிலும் இன்றும் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. கடந்த நவம்பர் 9-ம் தேதி தென்ஆப்பிரிக்காவிலும், 11-ம் தேதி போட்ஸ்வானாவிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பது தெரியவந்தது.

கடந்த 24-ம் தேதி தான் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்று கண்டறியப்பட்டு இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் தெரியப்படுத்தப்படுகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஏற்கனவே விமான நிலையங்களில் இருந்த கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி 27-ம் தேதி முதல் விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. 

உலக நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரானால் போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்தன. சுமார் 14 நாட்களில் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒமிக்ரான் பரவியுள்ளது. இந்த 14 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மத்திய அரசு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசாதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் வீட்டிற்கு சென்று 8 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். கொரோனா பரிசோதனையில் பாஸிட்டிவ் என்று வந்தால் கொரோனா மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் அறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.”

கேள்வி :  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்காண்டால் முழுமையாக தெரிய 7 நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை விமானநிலையத்திலேயே அவர்கள் தங்வைக்கப்படுவார்களா?

பதில் : “முன்பெல்லாம் கொரோனா பரிசோதனை முடிவு வர அதிக நாட்கள் எடுக்கும். தற்போது சுமார் 6 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவந்துவிடும் என்பதால், அதில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியே அனுப்ப முடியும்.  

தற்போது மரபியல் ரீதியான பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.  சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து வரும்போது கொரோனா இருக்காது. 

வந்த பின்பு 5 நாட்கள் கழித்துதான் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவரும். அதனால்தான் விமான பயணிகளை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு 7 நாட்கள் கழித்து கொரோனா பரிசோதனை எடுக்க சொல்கிறோம். கடமையை உணர்ந்து மக்களும் தற்போது கொரோனா பரிசோதனையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள்.” 

OMICRON2

கேள்வி : உலக சுகாதார நிறுவனம் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் அச்சுறுத்தல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று சொல்கிறார்களே. அது உண்மையா?

பதில் : ''உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால் டெல்டாவை போன்று ஒமிக்ரான் பரவிவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்துகிறார்கள்.  

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. எனினும் ஒமிக்ரானால் மற்றவர்களுக்கு பாதிப்பு எப்படி இருக்கிறது என்று முழுமையாக தெரிந்தபின்னர்தான் அதுகுறித்து தெரியவரும்.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டெல்டா உருமாறியது. ஆனால் பிப்ரவரி கடைசி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வீரியமிக்கதாக ஆனது. ரஷ்யாவில் உருமாறிய டெல்டா கொரோனாவால் ஒரு நாளில் 1000 இறப்பு கூட நிகழ்ந்தது.

அதுபோல் இதுவும் ஆகிவிடக்கூடாது. சுமார் 8, 10 நாட்கள் கழித்துதான் ஒமிக்ரான் குறித்து முழுமையாக தெரியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொல்லப்படுகிறது. அதற்காக பதறக் கூடாது. 

மத்திய வல்லுநர்கள், ஐசிஎம்ஆர் வல்லுநர்கள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய வல்லுநர்கள் ஆகியோரின் வேண்டுகோள் என்னவென்றால், தடுப்பூசி இந்த நோய்க்கு எதிர்ப்பு தெரிவிக்குமா என்று தெரியவில்லை என்றாலும், நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும் என்று கருதுகின்றனர். 

அதனால் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். விருப்பம் காட்டாதவர்களும் தடுப்பூசி போட வேண்டும். 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும்போது உள் அரங்கமாக இருந்தாலும், எந்த கூட்டமாக இருந்தாலும், அரசியல், பிறப்பு, இறப்பு, கல்யாணம், கல்வி கூட்டங்களில்  மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.”

கேள்வி : தடுப்பூசி போடுவதில் மக்களிடம் இன்னும் அச்சம் உள்ளதை பார்க்கமுடிகிறது ஏன்?

பதில்  : ''தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தடுப்பூசி என்று இல்லை. எந்த தடுப்பூசி அறிமுகம் இருக்கும்போதும் தயக்கம் வருவது இயல்பு. அதற்கான வரலாறு இருக்கிறது.  முதல் 4 மாதங்கள் தடுப்பூசி போடுவதில் தவிர்ப்பு இருந்தது. பிரபலங்கள் கூட தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது எதிர்பாரதவிதமாக நடந்த நிகழ்வுகள் தடுப்பூசி பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

OMICRON

அதன்பின்னர் தயக்கமின்றி மக்கள் தடுப்பூசி போட வந்ததால் 7 கோடி 7 லட்சம் டோஸ் தற்போது போட்டிருக்கிறோம். தடுப்பூசிக்காக மே மாதத்தில் அடிதடி, 4 மணிக்கே காத்திருந்தது இதெல்லாம் நடந்தது. கொரோனா 2-வது அலையில் ஒரு நாளில் 36 ஆயிரம் பாதிப்புகள், 493 இறப்புகள் என்று ஏற்பட்ட அச்சத்தில் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் வந்தார்கள்.

தற்போது ஒருநாளில் 750 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே வருகிறது என்பதால், இனிமேல் போடாமல்  இருந்துகொள்ளலாம் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 18 முதல் 44 வயதுடைய 80 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி  செலுத்தவரவில்லை.” 

கேள்வி : கிட்டத்தட்ட பெருவாரியான மக்கள் தடுப்பூசி போடவில்லை என்ற தரவு சுகாதாரத்துறையிடம் இருக்கிறதா?

பதில் : ''45 முதல் 60 வயது உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். 60 வயதுக்கு மேலே உள்ளவர்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். ஒமிக்ரான் வைரஸை எதிர்க்க நோய்வாய்பட்டவர்கள், முதியவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும். 

பல முயற்சிகள் செய்தும் ராணிப்பேட்டை, திருப்பூர், வேலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் உள்ளது. கோவை, காஞ்சிபுரம், நீலகிரி, ஆகிய மாவட்டங்களிலும் பழங்குடியினரும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்." 

கேள்வி : பிரபலங்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருதால் கொரோனா தடுப்பூசி அச்சம் உள்ளதே? 

பதில்  : "தடுப்பூசி செலுத்துவதால் கொரோனா பாதிப்பு வராது என்று யாரும் கூறவில்லை. தடுப்பூசி செலுத்தி கொரோனா வந்தால், அதன் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். 95 விழுக்காடு இறப்பு என்பது தடுப்பூசி போடாதவர்கள், ஒரே ஒரு டோஸ் போட்டவர்களிடையே தான் உள்ளது. 

5 விழுக்காடு மட்டுமே, அதாவது 2011 பேரில் 109 பேர் கூட்டு நோய் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியும் இறந்துள்ளார்கள். பச்சளிம் குழந்தைகளுக்கு 12 வகையான தடுப்பூசி 11 வகையான நோய்க்கு போடுகிறோம். போலியோவை எப்படி ஒழித்தோம். அப்படித்தான் தடுப்பூசி செலுத்தி குறைக்க வேண்டும். ஒமிக்ரான் வைரசை ஆய்வகங்கள் மூலம் கண்காணிக்கிறோம். 

தற்போது ஆர்டிபிசிஆர் 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு பண்ணமுடியும். 12 ஆய்வகங்களில் மரபியல்ரீதியாக ஒமிக்ரான் குறித்து ஆய்வு செய்ய முடியும். தமிழகத்தில் ஒமிக்ரான் இல்லை. ஆனால் ஆய்வகங்கள் இருக்கிறது.”

OMICRON
 
கேள்வி : ஒமிக்ரான் அறிகுறி என்ன?

பதில் : "சந்தேகம் இருந்தால் இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும். சாதரண சளி சாதரண காய்ச்சல் என்று விட்டுவிடாமல் பரிசோதனை எடுக்க வேண்டும்.”

கேள்வி : ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தினால் ஒமிக்ரான் வராதா?

பதில் : “ஆராய்ச்சிக்கு பிறகுதான் தெரியும். அனைத்து வகை தடுப்பூசிகளும் கொரோனவுக்கு எதிராக நோய் எதிர்ப்பை உருவாக்கும். கொரோனாவின் தீவிரத்தன்மையை குறைக்கும்.” 

கேள்வி : டெங்கு இருந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க பணிகள் எந்த அளவில் செய்திருக்கிறோம் ?

பதில் : “தினமும் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகறார்கள். கடந்த 2018 மாதிரி கொஞ்சம் பாதிப்புகள் இருக்கிறது. வீட்டுக்குள்ளே இருக்கிற நீர்தேக்கத்தால் டெங்கு வருது. 2020-ல் டெங்கு பாதிப்புகள் குறைவு. ஒருங்கிணைந்த சுகாதாரம் வேண்டும். நிலவேம்பு, ஆடாதொடை எல்லாவிதமான நோய்க்கும் எல்லாவிதமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது” இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பிரத்யேக நேர்காணல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.