காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகு சேதங்களை குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

anithaதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் சென்னையில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பல விசைப்படகுகள் சேதமாயின. சில விசைப்படகுகள் கடலில் மூழ்கின. இது குறித்து அரசுக்கு, மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதமடைந்த படகுகளை விரைவில் கணக்கெடுத்து அறிக்கை வழங்கும்படி அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
குழு அமைத்து ஆய்வு கனமழையால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்பட அனைத்து மீன்பிடி துறைமுகங்களில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகு சேத விவரங்கள் உள்பட அனைத்து சேதங்களையும் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். பின்னர் அதை அறிக்கையாக தயார் செய்து முதல்-அமைச்சர் பார்வைக்கு எடுத்து செல்வோம். சேத அறிக்கைக்கு பின்னரே மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

அப்போது அமைச்சரிடம், மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் இடங்களில் மேற்கூரை அமைத்து தரவேண்டும். சேதமடைந்த மேற்கூரைகளை சீரமைத்து தரவேண்டும் என அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆய்வின்போது மீன்வளத்துறை இயக்குனர் பழனிச்சாமி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜே.எபினேசர், ஐட்ரிம்ஸ் மூர்த்தி, தி.மு.க. மாநில மீனவர் அணி செயலளளாளர் ஆர்.பத்மநாபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.