“தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் மிகவும் சவாலாக இருக்கும் என்றும், மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றும், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

அதே நேரத்தில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அத்துடன், தமிழகத்தின் பல இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதாவது, தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், மழை இன்னும் வெளுத்து வாங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், தமிழ்நாட்டில் மழைக் காலம் மற்றும் குளிர் காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளன. இதனால், பொது மக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று, அரசு வலியுறுத்தி உள்ளது.

இதன் காரணமாக, மக்கள் அனைவரும் தங்களது உடலையும் ,சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் மிகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், தற்போதைய மழை காலத்தில், ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்றும், டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு அபாயம் கூட ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, தடிப்புகள், அசாதாரண ரத்தப்போக்கு, மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கின்றன. 

அதே போல், “டெங்கு வைரஸில் காய்ச்சல் நோயில் இருந்து தப்பிக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், வசிப்பிடத்தைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி மிகவும் விசாலமாகவும், தூய்மையாகவும் வீடு மற்றும் சுற்றுப்புறங்கள் இருக்கும் வகையில் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும், அறிவுறத்தப்படுகிறது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்“ என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “மழை காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் இதர நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என்றும், அறிவுறத்தப்பட்டு உள்ளது. 

அதே போல், “சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் என்றும், நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்றும்,  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.