மாடலாக விளம்பர படங்களில் நடித்து வந்த ஆரவ், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் தட்டிச் சென்றார். மார்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஆரவ்விற்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்த ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது. 

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவுடன் காதல் வசப்பட்டார் ஆரவ். இருவரும் ஒருவரை ஒருவர் ரொம்பவே நேசித்தனர். மருத்துவ முத்த சர்ச்சைகள் எல்லாம் எழுந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இருவரும் பிரேக்கப் செய்தனர்.

விஜய் ஆண்டனியின் சைத்தான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஓவியாவை ஆரவ் திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் நாயகியாக நடித்த நடிகை ராஹி என்பவரை இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர்களது சொந்த ஊரான நாகர்கோயிலில் இறுதிச்சடங்குகள் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் பிக்பாஸ் 3-வது சீசன் போட்டியாளரான நடிகை லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் கனடாவில் காலமானார். சமீபத்தில் தான் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஆரவ்வின் தந்தை காலமான செய்தி அவரது ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த 2020 ஆண்டு மிகவும் மோசமானது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.