நடிகை ஷகிலாவைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் “இன்னும் 20 நாளில் எந்த கட்சியில் சேருவேன் என்பது குறித்து அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, “அரசியலில் யாரும் சுலபமாக வந்து விட முடியாது” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “மக்கள் எதிர்பார்க்க கூடிய ஒரு நல்ல தேர்தலாக இந்த சட்டமன்ற தேர்தல் அமையும் என்றும், இந்த முறை அரசியலில் மாற்றம் வந்தே தீரும் என்றும், ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தாலும் அவ்வளவு சுலபமாக வந்துவிட முடியாது” என்றும், சூசகமாக தனக்கான அரசியல் பாணியில் பேசினார்.

மேலும், “மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு 2 கட்சிகள் மட்டும் இல்லாமல், பல வாய்ப்புகள் தற்போது உள்ளது என்றும், அது ஒரு நல்ல விஷயம்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“நடிகர் ரஜினிகாந்த் தனித்துப் போட்டியிட்டால், அது திமுகவுக்கு அனுகூலமாக இருக்கும் என்றும், ரஜினி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது பாஜகவிற்கு அனுகூலமாக இருக்கும்” என்றும், அவர் கருத்து தெரிவித்தார்.

முக்கியமாக, “நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்” என்றும், ஒரு அரசியல் விமர்சகராய் பேசினார்.

“தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா காலத்திலும், புயல் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றும், அம்மாவின் ஆட்சியில் அம்மா உணவகங்கள் பாப்புலர் ஆன திட்டமாக இருந்தது என்றும், முதலமைச்சர் பழனிசாமி நன்றாக ஆட்சி செய்து வருகிறார்” என்றும், நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

அதே போல், தொகுதி மக்களும் தங்களுடைய தேவையை அனுசரித்து தங்களுக்கான பிரதிநிதியை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஒட்டகத்தைக் கூடாரத்திற்குள் விட்ட கதைதான், கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே விடுவது” என்றும், அவர் விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, “விளை நிலங்களை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க கூடாது என்றும், அரசாங்கம் செய்ய வேண்டிய பொறுப்புகளில் இருந்து அரசாங்கம் விலகக்கூடாது” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், மத்தியில் இரு பெரிய கட்சிகள் இல்லை என்றும், ஒரே ஒரு பெரிய கட்சி தான் உள்ளது என்றும், மாநிலத்தில் இரு பெரிய கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். 

அத்துடன், “மற்ற கட்சிகளில் இருந்தும், புதிதாகக் கட்சி தொடங்குபவர்களிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது என்றும், எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் 20 நாட்களில் எனது முடிவை நான் அறிவிப்பேன்” என்றும், நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

அதே போல், “மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியில் இணைய விருப்பம்” உள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சினிமா விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஷகிலா, “எனது வாழ்க்கை முழுக்க பல்வேறு வலிகளை சொல்லும் வகையில் இந்தப் படம் அமைந்திருப்பதாக” குறிப்பிட்டார்.

அப்போது, “நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது” குறித்த கேள்விக்கு, “கோழைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள்” என்றும், அவர் பதில் அளித்தார்.

அதே போல், “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், எனக்கு அரசியலுக்குள் வர விருப்பம் இருப்பதாகவும், யாராவது அழைத்தால் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம்” உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

“பெண்களைப் பொறுத்தமட்டில் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்பதே நான் சொல்லும் அறிவுரை” என்றும் நடிகை ஷகிலா கூறினார்.