“காதலிக்கும்போது ஆணுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் குற்றமாகக் கருத முடியாது” என்று, டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் 
தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பெண்கள் மீது ஆண்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுகள் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி அப்படியே ஆண்கள் மீது பெண்கள் அதிக அளவில் குற்றச்சாட்டுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில். டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். 

அந்த வழக்கில், “என் காதலன், என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் என்றும், அந்த வாக்குறுதியை நம்பி நான் என் காதலனுடன் பல மாதங்களாக நெருங்கிப் பழகி வந்தேன்” என்றும், குறிப்பிட்டுள்ளார். 

“இந்த நெருக்கம் என்பது, எங்களுக்குள் மனதளவில் மட்டும் இல்லாமல் உடல் அளவிலும் இருந்தது என்றும், அதாவது நாங்கள் இருவரும் உடலுறவில் பல மாதங்கள் ஈடுபட்டு வந்தோம்” என்றும், அந்த இளம் பெண் சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஆனால், என் காதலன் திடீரென என்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு, என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டார் என்றும், ஆகவே, என் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த இளம் பெண் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி விபு பக்ரு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபு பக்ரு, அந்த பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். 

இது தொடர்பாக நீதிபதி அளித்த தீர்ப்பில், “திருமணம் செய்வதாக உறுதி அளித்ததை அடிப்படையாக வைத்து நீண்ட நாட்கள் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமைக் குற்றமாகக் கருத முடியாது” என்று, குறிப்பிட்டுள்ளார். 

“அதற்கு காரணம், நீண்ட காலமாக இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தான் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்றும், அதன் பின்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுவதில், எந்த அர்த்தமும் இல்லை” என்றும், நீதிபதி கூறியுள்ளார்.

“அதே நேரத்தில், மாதக் கணக்கில் ஒன்றாக வாழ்ந்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தால் அதன் பின்னர் பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தும் பழக்கம் என்பது, சமீப காலமாகப் பலரிடமும் அதிகரித்து வருகிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார். 

மேலும், “இது சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது என்றும், இதை ஒரு போதும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு, அந்த மாநில ஊடகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனைப் பல இளைஞர்களும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.