தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தாய்-சேய் நல விடுதிகளிலும்  கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை மதுரையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். 

ma.subramaniyan

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல விடுதிகளில் கர்ப்பிணிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களின் உடல்நலம் காக்கப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்காக யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. யோகா பயிற்சி அளிப்பதை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும் இது தொடர்பாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் தீபா கூறியதாவது நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் வீடுகளில் அன்றாடம் செய்யும் துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது மாவு அரைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் ஆபரேசன் மூலம் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட நேரிடுகிறது. பெண்கள் கர்ப்பம் அடைந்தது தெரிந்துமே யோகா பயிற்சி பெறலாம். இதன்மூலம் கர்ப்பகால பிரச்சினைகள் ஏற்படாது. பல பெண்கள் பிரசவ வேதனையை நினைத்து பயப்படுவதும் உண்டு. யோகா பயிற்சியின் மூலம் அந்த வலியும் அவர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். மூச்சு பயிற்சிகள் பேறு காலத்தில் ரத்தப்போக்கு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்கும். சுருக்கமாக சொன்னால் அந்த காலத்தில் இயற்கையாகவே செய்த வேலைகளின் மூலம் கிடைத்த பயிற்சியை இப்போது யோகா மூலம் கொடுக்கிறோம் என்றார். 

அதனைத்தொடர்ந்து  கர்ப்பிணிகள் நலன்காக்க அரசு இந்த திட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது. இது வருங்காலங்களில் சுகப்பிரசவங்கள் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் தீபா தெரிவித்தார்.