சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் ரஷியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் படைப் பிரிவை, இந்தியாவின் பஞ்சாப் செக்டரில் நிலை நிறுத்தப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின் போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய எல்லைப் பகுதியில் அப்போது போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

அதே போல், சீனாவும் இந்தியாவுக்கு முன்பாகவே, அங்கு 10 ஆயிரம் ராணுவ வீரர்களைக் குவித்து வைத்திருந்தது. இவற்றுடன், பல போர் வாகனங்களையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தது. முக்கியமாக, இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், இந்தியா - சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன.

அத்துடன், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகிவிட்டதாகவே அப்போது தகவல்கள் வெளியானது. ஆனால், அதன் தொடர்ச்சியாகச் சீனா பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவி வைரலாகி வந்தன. 

அப்போது தான், 20 இந்திய வீரர்களைக் கொன்ற சீனாவைப் பழிவாங்கவும், சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட முக்கிய செயலிகளை இந்திய அரசு அதிரடியாகத் தடை செய்தது.

அதன் தொடர்ச்சியாக, “கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட, சீனா தனது அணு சக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது” என்று பென்டகன் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, “சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030 க்குள் 1,000 ஆக உயரலாம்” என்றும் அறிக்கை கூறுகிறது.

இவற்றுடன், “தைவானின் நிலை குறித்த சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும்” அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

“இந்த அறிக்கை சீனாவுடனான வெளிப்படையான மோதலை பரிந்துரைக்கவில்லை என்றாலும், அது போர்க்களம், காற்று, நிலம், கடல், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய அனைத்து களங்களிலும் அமெரிக்காவிற்கு சவால் விடும் சீன இராணுவத்தின் நோக்கத்தை சுட்டி காட்டும் வகையில் உள்ளது.

இதனால், எல்லையில் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கொண்டுள்ள சீனா, கடந்த ஒரு வருடத்தில் நினைத்ததை விட மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது, இந்தியாவிற்கான எச்சரிக்கையாகவே அது பார்க்கப்படுவதாக கருத்துக்களும் எழுந்துள்ளன.

இப்படியாக, சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - ரஷியா இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இதில், 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை ஆகியவற்றை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ் 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

அப்போது தான், அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தானது.  

இதில், இந்திய விமானப்படை அதன் எஸ் 400  வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை பஞ்சாப் செக்டரில்  நிலைநிறுத்தத் தொடங்கி உள்ளது. 

இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்றும், கூறப்படுகிறது. 

அதன் படி, முதல் படைப்பிரிவின் இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வான்வழி அச்சுறுத்தல்களை கவனித்துக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், ஏவுகணை அமைப்புகளின் உபகரணங்கள் வான் மற்றும் கடல் வழிகள் வழியாக வருகின்றன என்றும், அவை விரைவில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிலை நிறுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதன்படி, “ரஷியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் படைப்பிரிவை இந்தியாவின் பஞ்சாப் செக்டரில் நிலை நிறுத்தப்படுகிறது” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, உலகின் அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் எஸ் 400 ரக ஏவுகணைகள், எஸ் 300 ரக ஏவுகணைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இந்தியா - ரஷ்யா இடையிலான ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உடன் தொலைபேசியில் முன்னதாக உரையாடி உள்ளார்.