தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோமாளி. நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கும் இந்த  புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இத்திரைப்படத்தை  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் முன்னதாக நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள நாய் சேகர் திரைப்படத்தை தயாரித்துள்ளது. தொடர்ந்து  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 22வது திரைப்படமாக இத்திரைப்படம் தயாராகிறது .

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.