தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu govt

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக  அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும்  கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து  முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

மனோன்மணியம்  சுந்தரனார் அவர்கள் எழுதிய நீராருங் கடலுடுத்த என்ற பாடல் 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1913-ம் ஆண்டு முதல் முறையாக தமிழ் சங்கத்தில் நீராருங் கடலுடுத்த என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு 1914-ம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தில் இந்த பாடலை பாடி வந்துள்ளார்கள். அதை தொடர்ந்து 1970-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இனி வரும் அரசு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நிச்சயம் இருக்கும் என தெரிவித்திருந்தார். பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர் தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்

அதனைத்தொடர்ந்து 1891-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் தமிழ் தெய்வ வணக்கம் என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ் தாய் வாழ்த்தாக பாடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.