சினிமாவில் வருவது போல் கார்களில் மாறி மாறிச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய நல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இது தவிர அதிமுக கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால், “பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கு அரசு வேலையும் வாங்கித்தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக” முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக கடந்த மாதம் 15 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அத்துடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தற்போது 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். அதே நேரத்தில் தான், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது அதிமுக வட்டாராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தான், இந்த வழக்கில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ராஜேந்திர பாலாஜி தென்காசி மாவட்டம் குற்றாலம் அல்லது கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அந்த 3 தனிப்படைகளும் அங்கு விரைந்து உள்ளன.

மேலும், அவர் பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்து சென்று உள்ளது.

அதே நேரத்தில், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 600க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “சினிமா பட பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பித்ததாகவும்” போலீசார் தரப்பில் கிசுகிசுக்கப்படுகின்றன. அது, எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இதனிடையே, தமிழக காவல்துறையான, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதற்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.