மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அதாவது, தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்த 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழக்கினார். 

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது கிட்டதட்ட 30 ஆயிரத்திற்கு மேல் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் பணியானை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார்.

கொரோனா நிவாரணம் நிதி வழங்கும் இந்த நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி IAS உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் உடன் இருந்தனர்.

இந்த உதவித் தொகையை எப்படி பெறுவது என்பது தொடர்பான அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டு தொகையை ஆன்லைன் வாயிலாகவே எளிமையாக விண்ணப்பித்து பெற முடியும் என்றும், இது குறித்த அறிவிப்பையும் அரசு முன்னதாக வெளியிட்டு இருந்தது. 

அதன்படி, இந்த இழப்பீட்டு தொகையை ஆன்லைன் வாயிலாகவே எளிமையாக விண்ணப்பிப்து பெற தமிழக அரசின் https://www.tn.gov.in/ வலைத்தளத்துக்கு சென்று whats new என்ற பகுதியில் Ex Gratia for COVID 19 என்ற லிங்கை க்ளிக் செய்து அதில் தோன்றும் திரையில் உயிரிழந்தவர் மற்றும் இழப்பீடு தொகை கோருபவர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், உரிமை கோருபவரின் விவரங்கள், இறந்தவரின் அடிப்படை விவரங்கள், சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் விவரங்கள், இறந்தவரின் நிரந்தர முகவரி, தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி, சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய வேண்டும். 

இறுதியாக, “உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி கருணைத்தொகை 50 ஆயிரம் ரூபாயை வழங்குப்படி கேட்டுக்கொள்கிறேன்” என்ற உறுதி ஆவணத்தை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றும், தமிழக அரசு தெளிவாக கூறியுள்ளது.

இதன் மூலமாக, இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கிலேயே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.