மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

STALIN

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கதொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும்,  ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3- 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்க அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில் வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆண்டு வருமானம் ரூ.72,000 என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது என மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.