“இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற யாரையும் கொலை செய்வோம்” என்று, சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து அமைப்பினர் நடத்திய மாநாட்டில் இந்து நாட்டை கட்டமைக்கக் கொலை செய்வோம் என்று வெறுப்பைத் தூண்டும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் “தர்ம சன்சத்” என்கிற இந்து அமைப்பு, 3 நாட்கள் மாநாட்டைக் கடந்த 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடத்தினர். 

இதில், ஏராளமான இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், கடைசி நாளில் சில அதிரடியான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்படி, கடைசி நாள் மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதி மொழியின்படி, “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம் என்றும், அதற்காகக் கொலையும் செய்வோம்” என்று, அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டது, மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியாக, சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட இந்த காட்சிகள் யாவும் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்டது. இதனைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

அதாவது, சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும் வீடியோவில், “இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம், இந்துக்களுக்கு மட்டுமான நாடாக உருவாக்குவோம், இதற்காகச் சண்டையிடுவோம், செத்து மடிவோம், தேவை ஏற்பட்டால் நாங்கள் கொலையும் செய்வோம், எதற்காகவும் அஞ்ச மாட்டோம். எந்த தியாகத்தையும் செய்யவும் தயங்க மாட்டோம்” என்று, அவர்கள் உறுதி மொழி ஏற்றுள்ளனர்.

அத்துடன், “நமது முன்னோர்கள், ஆசிரியர்கள், பாரத மாதா ஆகியோர் நமக்குச் சக்தியைத் தருவார்கள்” என்றும், அவர்கள் அந்த வீடியோவில் பேசி உள்ளனர்.

குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா, பாஜக மகளிர் அணித் தலைவி உதித்தா தியாகி உள்ளிட்டோர் இந்த சாமியார்கள் மாநாநட்டில் கலந்துகொண்டனர். 

சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய இந்த கருத்துக்கள், இந்தியா முழுவதும் பரவி மற்ற மதத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பாஜக தலைவர்களின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஷியாமா முகமது, “நகைச்சுவையாக கருத்துச் சொல்பவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள் என்றும், ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றும், அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

“இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் கூட்டத்திற்கு உத்தராகண்ட் மாநில பாஜக அரசு அனுமதி அளித்தது ஏன்?” என்றும், மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

“இந்தியாவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் மாநாடு நடத்திய தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, “இந்து அமைப்பினர் நடத்திய மாநாட்டில் இந்து நாட்டை கட்டமைக்கக் கொலை செய்வோம்” என்று, வெறுப்பைத் தூண்டும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கு நாடு முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.