மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் K.S.சேதுமாதவன். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை K.S.சேதுமாதவன் இயக்கியுள்ளார்.

குறிப்பாக தமிழில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான நாளை நமதே திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் K.S.சேதுமாதவன் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நம்மவர் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சிறந்த கலை படைப்புகளால் 4 பிலிம்பேர் விருதுகளையும், 9 கேரள அரசின் மாநில விருதுகளையும், ஒரு நந்தி  விருதும் பெற்ற இயக்குனர் K.S.சேதுமாதவன் தமிழில் நம்மவர் & மறுபக்கம், தெலுங்கில் ஸ்ரீ மற்றும் 6 மலையாள திரைப்படங்களோடு சேர்த்து சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கதைக்கான 10 தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். 

இந்நிலையில் இயக்குனர் K.S.சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம்வந்த பழம்பெரும் இயக்குனர் K.S.சேதுமாதவன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.