“பேருந்தில் பயணிக்கும் சக பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை ஓட்டுநர், நடத்துநரே சேர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அல்லது பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம்” என்று, தமிழக அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

குறிப்பாக, பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பள்ளிகளில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, பள்ளிகளில் பெண் பிள்ளைகள் புகார்கள் அளிக்கும் வகையில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன், பெண் பிள்ளைகள் தொலைப்பேசி மூலமாகவும் புகார்கள் அளிக்கும் வகையிலும் தொடர்ந்து தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே, பேருந்தில் பயணிக்கும் சக பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசு சில அதிரடியான திட்டங்களை தற்போது கையில் எடுத்து உள்ளது.

அதுவும், பெண்களின் பாதுகாப்பைத் தடுக்கும் விதமாக, “பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்க” தமிழ்நாடு அரசு புதிதாகத் திட்டமிட்டு உள்ளது. 

அதன் படி, “தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணி எவரேனும் ஆபாசமான செயலை செய்தால், விசில் அடித்தல், கண் சிமிட்டுவது, மனம் புண்படுத்தும் சைகைகள் அல்லது பாடல்களைப் பாடுவது, தவறான வார்த்தைகளை உச்சரிப்பது, உற்றுப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டாலே, அது குற்றமாகக் கருதப்படும்” என்று, தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்து உள்ளது.

அத்துடன், “பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை எச்சரிக்கைக்குப் பிறகு ஓட்டுநர், நடத்துநரே அந்த பேருந்துகளில் இருந்து கீழே இறக்கி விடலாம் என்றும், அல்லது அந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அவர்களே சென்று ஒப்படைக்கலாம்” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

“இதைத் தொடர்ந்து பெண் பயணி அல்லது சிறுமிக்கு எரிச்சல், துன்புறுத்தலை ஏற்படுத்தும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை காண்பித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

அதே போல், “ஒரு பெண் பயணி அல்லது சிறுமியின் பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் எதையும் யாரும் கேட்கக் கூடாது” என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையைத் தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளைத் தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை தற்போது கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.