கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த சில வாரங்களாக உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆபத்தான நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

omicron modiஇந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் அங்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நேரம் இது. 

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை நாம் தொடர்ந்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

modi omicronமேலும் மாநிலங்களுடன் இணைந்து செயல்படவும், அவற்றின் கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும்படியும் பிரதமர் மோடி மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார். புதிய உருமாறிய கொரோனாவால் ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட மாவட்ட அளவில் சுகாதார அமைப்புகளின் அவசியத்தையும் பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார். 

அனைத்து மாநிலங்களிலும் போதியளவு ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சார்ந்த கருவிகள் இருப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். நாட்டில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறும் அனைத்து மாநிலங்களைப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 

மேலும் இந்தக் கூட்டத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.