பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா இரண்டாம் அலையை உருவாக்கியது.

இந்த இரண்டாம் அலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நினைத்தபோது கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளால் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற கருத்து நிலவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன. 

corona vaccine booster shots p chidambaramஅதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தும் பொருட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸை செலுத்து வருகின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த பணக்கார நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இதனால் ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைப்பதிலேயே சிக்கல் நிலவுகிறது. இந்தியாவை பொறுத்தவரை முதல் இரண்டு டோஸ்களில் வீரியம் குறையும் நேரத்தில் 3 ஆவது டோஸ் தேவைப்படுகிறது. 

நிலைமையை பொறுத்து அடுத்த ஆண்டு 3 ஆவது டோஸ் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை. ஆரோக்கியமான நபர்களுக்கு இது அவசியம் இல்லை என இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒமிக்ரான் பரவல் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் பூஸ்டர் டோஸ் செலுத்தத் தொடங்கி விட்டன. இந்தியாவில் 200 பேருக்கு மேல் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களுக்கு மட்டுமே பலன் தரும் என லான்செட் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ள நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“பூஸ்டர் தடுப்பூசிகள் இன்றியமையாதது என்று முடிவு செய்ய போதுமான ஆராய்ச்சி, அறிஞர்களின் ஆதாரங்கள் உள்ளன. லான்செட் நடத்திய ஆய்வில் கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதத்தில் குறைந்துவிடும் என்பது எச்சரிக்கை மணியை அடிப்பதாக உள்ளது. 

corona vaccine booster shots p chidambaramபூஸ்டர் தடுப்பூசிகளை அனுமதிக்கும் நேரம் தற்போது வந்துவிட்டது. ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கும் தருணம் இது. 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (பாதுகாப்பு வாதம்) பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கான அதன் தவறான ஆர்வத்தில், தடுப்பூசி போடப்பட்ட லட்சக்கணக்கான இந்தியர்களை அரசு தொற்றுநோய்க்கு ஆளாக்குகிறது. 

கொரோனாவின் 3-வது அலை அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களை தாக்கினால், அதற்கு அரசு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.