ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதிப்பகள் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேரங்களில் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல உருமாற்றங்களை பெற்று வருகிறது.

ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று மாறிய நிலையில் தற்போது முதன்முதலாக தென் ஆப்பிரிகாவில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதியன்று மீண்டும உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.  இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. 

பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது.

omicron curfew lockdownஇந்தியாவில் தற்போது 269 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா - 65, டெல்லி - 64, தமிழ்நாடு -34, தெலுங்கானா - 24,  ராஜஸ்தான் - 21, கர்நாடகா - 19, கேரளா - 15, குஜராத் - 14, ஜம்மு-காஷ்மீர் - 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 2, சண்டிகர் - 1, லடாக் - 1, மேற்கு வங்காளம் - 1, உத்தரகாண்ட் - 1 ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

ஒமிக்ரான் பரவலை அடுத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொற்று இரட்டிப்பாகும் வேகம், மாவட்டங்களுக்கு இடையே தொற்று அதிகரிக்கும் விகிதம் ஆகியவற்றை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

வரும் பண்டிகை காலத்தையொட்டி உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒமிக்ரான் பரவும் விகிதத்தை கண்டறிந்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

omicron threadஅடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது  தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது “தொற்று உள்ளோரின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டு” என்று ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.