நெல்லையில் பள்ளி சுவர் இடிந்த விழுந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் இப்பள்ளியில் நேற்று காலை 10.50 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் நான்கு மாணவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகமெங்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பல அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்று பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர்.

anbil mahesh school accident

சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டமும் செய்தனர். பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் சமரசம் பேசும் நிலைமையும் நேற்றைய தினம் ஏற்பட்டது.

விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாலும், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதுதான் பெருத்த கேள்வியாக எழுந்தது.

விபத்து நடந்த பள்ளிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், இன்னும் சொல்லப் போனால் நிரந்தர அங்கீகாரம் வழங்கி உள்ளதாகவும், இதனால் மாவட்ட முதன்மை கல்விதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்தும் விரைந்து ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக அரசு தரப்பிலும் நாங்கள் நேராக சென்று ஆய்வு செய்யவுள்ளோம்.

சி.இ.ஒ-க்களுக்கும் இதுகுறித்து அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு முதற்கட்டமாக சில மாவட்டங்களில் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளதால், அங்கு அக்கட்டிடங்களை இடிக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இடிக்கப்படும் பள்ளிக்கட்டடங்களுக்கு பதில், மாற்று கட்டடங்களில் வகுப்புகள் செயல்பட ஏற்பாடு செய்துள்ளோம். அந்த மாணவர்களுக்கு எந்த வகையிலும் படிப்பு தடைப்படாது. 

நேற்று நெல்லையில் ஏற்பட்ட பள்ளி சுவர் இடிந்த விழுந்ததற்கு, பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம். தற்போதைக்கு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, வேறொரு பள்ளி வளாகத்தில் பாடம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

nellai school accident anbil mahesh

தயவுசெய்து ‘விபத்து நடந்து இழப்பு வந்தப்பிறகு தான் நடவடிக்கை எடுப்பீர்களா’ என நினைக்க வேண்டாம். கடந்த மாதங்களில் இதுகுறித்தும் ஆய்வு செய்துவந்தோம். இருப்பினும் டிசம்பரில்தான் அனைத்தும் முடிவடையும் நிலை உள்ளது.

தற்போது எங்கள் பணியை அதிவேகமாக துரிதப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், கிராம அளவில் - ஒன்றிய அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்ய ஆய்வுக்குழுக்கள் அமைக்க வேண்டுமென, அனைத்து மாவட்டங்களின் நிர்வாகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மிகத்தீவிரமாக இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். உடனடியாக அனைத்தும் சரிசெய்யப்படும். பள்ளிகள் கட்டடங்கள் மட்டுமன்றி போக்குவரத்து வாகனங்கள் மீதான தரப்பரிசோதனையும் ஆய்வும் எங்களின் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க, அனைத்து வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.