நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

students death

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று மாணவர்கள் காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்ல தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே 6 மாணவர்கள் காத்து நின்றனர்.

அதனைத்தொடர்ந்து அப்போது திடீரென கழிவறையின் தடுப்பு சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் மற்றும் 9-ம் வகுப்பு மாணவனான டவுனை சேர்ந்த அன்பழகன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்த மாணவர்கள் 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கட்டிடத்தின் உறுதித் தன்மையை அறியும் வகையில் இன்ஜீனியர்களையும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்திருக்கிற உயர் அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட்டு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து  இன்று நடந்தது போலான துரதிர்ஷ்ட சம்பவம் ஒன்று இனிமேல் என்றும் நடைபெறக் கூடாது என்றும் தெரிவித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார். சுவரின் அடித்தளம் உறுதியாக இல்லாததால் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் நெல்லை காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுவர் விபத்து குறித்து மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின் முழுவிவரம் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.