“தீரான் அதிகாரம் ஒன்று” சினிமா பாணியில், நள்ளிரவு நேரத்தில் கதவை தட்டி  துப்பாக்கி முனையில் அதிபயங்கர கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறி, தமிழ்நாட்டு மக்களையே கதிகலங்க செய்திருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் தான் “தீரன் அதிகாரம் ஒன்று”. 

இந்தப் படத்தில், “நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலை தமிழக போலீஸ் எப்படி பிடித்தார்” என்று, அமைந்திருக்கும். 

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், போலீஸ் விசாரணையில் தெரியவரும். இந்த படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றிபெற்றதுடன், பொது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் வருவதைப் போன்றே நள்ளிரவு நேரத்தில் ஒதுக்கு புறமாக உள்ள வீடுகளின் கதவை தட்டி  துப்பாக்கி முனையில் அதிபயங்கர கொள்ளை சம்பவம் ஒன்று தற்போது மீண்டும் தமிழகத்தில் அரங்கேறி அப்பகுதி மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதுவும், தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே தான் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் இருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்கரன் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் நள்ளிரவு 12 மணி அளவில், யாரோ வீட்டுக் கதவை வேகமாக தட்டி உதவிக்கு அழைப்பது போல் அழைத்திருக்கிறார்கள்.

இதனால்,  “என்னவோ ஏதோவென” பதறிப் போய் எழுந்த புஷ்கரன், தனது வீட்டுக் கதவை திறந்து உள்ளார். அப்போது, அதிபயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வெளியே நின்று உள்ளனர்.  

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த புஷ்கரன், உடனே வீட்டின் கதவை திரும்பவும் மூடியிருக்கிறார்.

இதனையடுத்து, வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்த மர்ம கும்பல், கையில் வைத்திருந்த வீச்சரிவாளால் அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து உள்ளனர்.  

அந்த நேரத்தில், புஷ்கரன் உள்பட அந்த வீட்டில் இருந்த 4 பேரையும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த மர்ம கும்பல், தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டுத் துப்பாக்கியாலும் அவர்களை சுட்டு உள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த 4 பேரும் ரத்தம் வடியும் அளவுக்கு பலத்த காயமடைந்தனர். 

மேலும், அந்த வீட்டு பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் தங்க நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். 

இதனையடுத்து, கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகினறனர்.

இந்த அதிபயங்கர கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீசார், “கொள்ளையில் ஈடுபட்டது யார்?” என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, “தீரான் அதிகாரம் ஒன்று” பட பாணியில் மீண்டும் நடைபெற்றிருக்கும் இந்தக் கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் ஒதுக்கு புறமாக வாழும் பொது மக்களிடையே, இந்த கம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.