ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்து வந்த மழை ஓய்ந்து விட்ட நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரதில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதனைத்தொடர்ந்து டிசம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகக் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20 முதல் 22 வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாற அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.