இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும், ஒமைக்ரான் தொடர்பாக வருகிற பொது முடக்கத் தளர்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் அது பரவி உள்ளது.

முக்கியமாக, ஒமைக்ரான் என்னும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளதால், இந்திய மக்கள் மீண்டும் வைரஸ் பீதியில் இருக்கிறார்கள்.

குறிப்பாக, உலகின் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் பரவி வரும் நிலையில், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அத்துடன், ஓமைக்ரான் பரவியவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று முன்னதாக உறுதி செய்யப்பட்டது. இதனால், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், “பள்ளி, கல்லூரிகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்றும், தொடர்ந்து தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படும்” என்றும், குறிப்பிட்டார். 

மேலும், “பள்ளிகள் அனைத்தையும் மீண்டும் மூடும் நிலை ஏற்படும் என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் அதிலிருந்து, அரசு பின்வாங்காது என்றும், வல்லுநர்களின் ஆலோசனைப்படி தற்போது நேரடி வகுப்புகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது” என்றும், கூறினார்.

அதே போல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், இப்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில் ஒமைக்கரான் பரவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மீண்டும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். அப்போது, “ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத்துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை” என்று, குறிப்பிட்டார். 

“பொதுவாக பொது முடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது, மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதலமைச்சர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம் என்றும், அடுத்து வருகிற பொது முடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார்.

“இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அது தொடர்பாக உடனடியாக செயல்படுத்தப்படும்” என்றும், ஒமைக்ரான் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.