சண்டை போட்ட காதலியை சமாதானபடுத்துவதற்காக, விலை உயர்ந்த பொருட்களை பரிசளிக்க அளிக்க நினைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடிய காதலன் ஒருவன் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லி சரோஜினி நகரை சேர்ந்த ஆதித்யா குமார் என்பவர், அங்குள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஆதித்யா குமார், கடந்த 16 ஆம் தேதி வியாழக் கிழமை தனது வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, அந்த வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை கட்டிப்போட்டு விட்டு, அந்த வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை அப்படியே அவரது கண் முன்னாடியே திருடிச் சென்றனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த திருடர்கள் சென்ற பிறகு, இது குறித்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகள் யார் என்பதை உடனடியாக அடையாளம் கண்டனர்.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த 3 குற்றாவளிகளையும் தீவிரமாக தேடி வந்த போலீசார், நேற்றைய தினம் சரோஜினி நகரில் ஒரு இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது,  அந்த 3 பேர் தான் ஆதித்யா குமார் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனை அடுத்து, 20 வயதான ஷம்ஹம், 19 வயதான ஆசிப், 41 வயதான முகமது ஷரிபுல் முல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, “ஷம்ஹம் என்ற கொள்ளையன், கடந்த ஜூலை மாதம் செல்போன் திருட்டில் கைதாகி சிறை சென்று உள்ளான். 

அந்த சிறையில் ஷம்ஹக்கும் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆசிப், முகமது முல்லாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து, சிறையில் இருந்து 3 பேரும் கடந்த மாதம் விடுதலையாகி உள்ளனர். இதனையடுத்து, சிறையில் இருந்து விடுதலையான ஷம்ஹம் ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். 

அந்த பெண்ணும், இவரை காதலித்து உள்ளார். ஆனால், சமீபத்தில் காதலியான அந்த பெண், காதலன் ஷம்ஹமுடன் சண்டை போட்டு உள்ளார். அந்த சண்டைக்கு பின் அந்த பெண் ஷம்ஹமிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், தனது காதலியை தன்னிடம் பேசவைக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து சமாதானப்படுத்த வேண்டும் என நினைத்த ஷம்ஹம், தனது சிறை நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு உள்ளான்.

அதன் படி, விலை உயர்ந்த பொருட்களை வாங்க பணம் இல்லாதது குறித்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளான். 

அதன் தொடர்ச்சியாகவே, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை திடுடலாம் என அவர்கள் முடிவு செய்து,  ஷம்ஹம் சரோஜினி நகரில் உள்ள ஆதித்யா குமார் வீட்டிற்கு சென்று அவரை கட்டிப்போட்டுவிட்டு லேப்டாப், செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடியது” என்று, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

விசாரணைக்கு பிறகு 3 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபர்பையும் ஏற்படுத்தி உள்ளது.