தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 3-வது முறையாக இணைந்துள்ள சிலம்பரசன்-கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் தயாராகும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா & காஷ்மோரா படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார்  படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிலம்பரசன்.

முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாநாடு திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் பிரபல OTT தளமான, SonyLIV தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி முதல் SonyLIV தளத்தில் மாநாடு திரைப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.