பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசார்  வழக்குப்பதிவு செய்தது. 

arjunsambathஜெய் பீம் படத்தை முன்வைத்து பாமக - சூர்யா இடையே சச்சரவு எழுந்தது. இதில், சூர்யாவை தாக்குபவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரான சித்தமல்லி பழனிசாமி என்பவர் பகிரங்கமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு எதிரான மிரட்டல்கள் மேலும் அதிகரித்தன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாய், சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளின்கீழ் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். சூர்யாவுக்கு எதிரான சித்தமல்லி பழனிசாமியின் மிரட்டல் அறிவிப்புக்கு முன்னோடியாக, அதேபோன்ற மிரட்டலை இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ஏற்கனவே விடுத்திருந்தார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு நபர் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது அங்குள்ளவர்களால் வீடியோவகப் பதிவு செய்யப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1001 பரிசாக வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தினார். இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்து வந்தநிலையில்  இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் சமாதனம் அடைந்ததாக கூறப்பட்டது. 


இந்நிலையில்  ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அந்த நபர் விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்ததாகவும், முத்துராமலிங்க தேவரை விமர்சித்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், "தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் எனவும் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதைக்கு ரூ.1001 என்று தெரிவித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் சர்ச்சை பேச்சுக்கள் வழக்கமாகிவிட்டது என்று சமூகவலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர் . மேலும் இந்தப் பதிவு சமூக அமைதி மீறுதலை தூண்டும் வகையிலும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள அர்ஜூன் சம்பத் இவ்வாறு பேசி வருவதாகவும், அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்துக்கள் வெளிவந்தன. இதனிடையே கோவை மாநகர காவல்துறையினர் அர்ஜூன் சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் கோவை கடை வீதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரிவு 504 - வன்முறையை தூண்டும் விதமாக பேசுதல், பிரிவு 506 (1) மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.