சென்னை உள்பட தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்தது.

இந்த காற்றழுத்த மண்டலத்தால், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து தீர்த்தது. குறிப்பாக சென்னையில் மிக கனமழையால், நகரின் பல பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்தன.

c1

தற்போது சென்னையில் நிலைமை சீரடைந்து வந்தநிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

இதன்படி தமிழகத்தில் தற்போது காலையில் இருந்து கனமழை பெய்து வந்தாலும், பிற்பகலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. 

c2

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இதற்கிடையில், தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம்  விடுத்துள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மீண்டும் மிரட்டும் மழையால், சென்னையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதே போன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.