காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், மீண்டும் கனமழை மிரட்டி வரும் நிலையில், சென்னையில் 24 மணிநேரமும் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையுடன், கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னை மாநகரம் வெள்ளக் காடாகின.

இந்நிலையில், வங்க கடலில் கடந்த 13 ஆம் தேதி உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

v1

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்பார்த்த கனமழை இதுவரை பெய்யவில்லை. படகுகள் அனைத்து இடங்களிலும் தயாராக உள்ளது. மழை பெய்தால் உணவு வழங்க தயார் நிலையில் உள்ளோம். 

v2

சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது. பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழையால் ஏற்படும் பாதிப்புக்களை பொதுமக்கள் 9445477205 மற்றும் 9445025819 என்ற எண்களில் தெரிவிக்கலாம்” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம்  விடுத்துள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dear Chennaiites
You can contact #GCC for flood related grievances through 1913 or through the given whatsapp numbers👇#ChennaiRains#ChennaiCorporation#Chennai1913 pic.twitter.com/WEfo5cTdWA

— Greater Chennai Corporation (@chennaicorp) November 17, 2021