சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்பதால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்பட அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 4 நாட்களாக சற்று மழை ஓய்திருந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வ்பு பகுதி தீவிரமடைந்தது.

c1

அதன்படி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெறாது என கூறப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 260 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திரா - வடதமிழகம் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பரந்து விரிந்திருக்கும் என்பதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழையின் தீவிரம் பிற்பகல் முதல் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. 

தென்மேற்கு, அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையோரங்களில் பலத்த காற்று மணிக்கு 45-65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

c2

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலிலும், தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த முறையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.