காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது எனவே மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

rainதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

அதனைத்தொடர்ந்து வங்க கடலில் கடந்த 13-ம் தேதி உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது, அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில்   மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும்,  நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள  அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும்  தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்பார்த்த கனமழை இதுவரை பெய்யவில்லை, படகுகள் அனைத்து இடங்களிலும் தயாராக உள்ளது, மழை பெய்தால் உணவு வழங்க தயார் நிலையில் உள்ளோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.